பயங்கரவாத சட்டத்தால் தமிழ்மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் 

P2P_Press_Release_24.05.2021

 

சிங்கள இனவெறியரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது

 

மேமாதம் 23 ஆம் நாள் (23.05.2021) மனித உரிமைகள்  சமூக செயற்பாட்டாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.சபாரட்ணம் சிவயோகநாதன் (சீலன்) அவர்களின் திராய்மடு மட்டக்களப்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு வருகைதந்த பயங்கரவாத தடுப்பு பிரிவைச்சேர்ந்த இரு புலனாய்வு அதிகாரிகள் அவர்மீது ஒன்றரை  மணி நேரம் கடுமையான விசாரணையினை மேற்கொண்டனர்.

 

இதன்போது தமிழீழ விடுதலை புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றீர்களா? என்ற கோணத்திலும், சிங்களஅரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்களா? என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அவருடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிப்படையாக அறவழியில் மக்கள் நலன் சார்ந்து செயற்படும் ஒருவருக்கு வழமை போலவே பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும், மனித உரிமைகள்  சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சிங்கள இனவெறியரச அறவழிக்கெதிரான ஆட்சியினை முன்னெடுக்கவும் சிங்களஅரசு நடத்தும் தமிழருக்கு எதிரான அடக்குமுறையாகவே உள்ளது. மேற்குறிப்பிடப்படும் விசாரணைகள் அனைத்தும் விசாரணை எனும் பெயரில் மனித உரிமைகள்  செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதுடன் அவர்கள் தொடர்ந்து செயற்படாதவாறு உளவியல் ரீதியான அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் கொடுப்பது ஆகும். குறிப்பாக தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுவெளியில் செயற்படும் இளைஞர்களை சிங்கள ஆயுத படைகளினால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நினைவேந்தலை நடத்தியமை, முகநூலில் புகைப்படங்களை வெளியிட்டமை, முகப்புத்தகத்தில் நினைவேந்தல் செலுத்திப் பகிர்ந்தமை போன்ற காரணங்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நடவடிக்கையானது தமிழர் தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்குமான மறைமுக மிரட்டலையும் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் கொடுத்து அவர்களின் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதாகும். இவ் அரசின் கடந்தகால மற்றும் தற்கால செயற்பாடுகளும் முன்னெடுப்புக்களும் இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *