தமிழீழ மண்ணில் யாழ்ப்பாண மாநிலம் வடமராட்சி மறவர் புலவர் புகழ் பாடும் புலோலி சாரையடி வீரமண்ணில் கருவாகிய தமிழீழ விடுதலைக்காய் களமாடி வீரச்சாவைத் தழுவிய கேணல் சாள்சின் அப்பா சண்முகநாதன் அவர்கள் திருவள்ளுவர் ஆண்டு 2053 கடகம் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை (12.8.2022) உலகத்தமிழர்களின் மூச்சுக்காற்றோடு இணைந்துள்ளார்.
சண்முகநாதன் அவர்கள் புலோலி சாரையடி வீரமண்ணில் பிறந்தார்.
வீரமறவன் வீரவேங்கை கேணல் சாள்சு வரலாறு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உயரிய வீரன் தான் கேணல் சாள்சு.கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்போரில் பல வரலாற்று வெற்றித் தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ்குடாநாட்டை ஆக்கிரமித்த சிங்களப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் கேணல் சாள்சு.
சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் தமிழீழப்போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த சரியான விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.பின்னர் வடமராட்சியில் சிங்களப்படையின் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடியவர்.
தமிழீழ மக்களை அழிக்கும் கள்ளத்திட்டத்தோடு தமிழீழ மண்ணில் இந்திய அமைதிப்படை காலூன்றி முழுமையாக யாழ். குடாநாட்டை சுற்றிவளைத்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்தியப்படையின் தமிழீழ மக்களை அழிக்கும் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் கேணல் சாள்சு. அங்கு மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ மண்ணில் தமிழ் இனஅழிப்பை முடித்துவிட்டு இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.
உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிங்களஅரச படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிங்கள அரச படைகளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.
2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பயணிகளும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த அதிஉயர்வீரன் சாள்சு.
தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை..
சாள்சு எல்லோரோடும், தேசியத்தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைப் புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர்.
சாள்சின் இழப்போடு சாள்சின் அப்பாவின் இழப்பும் உலகத்தமிழர்களின் இழப்பு.வீரவேங்கை சாள்சின் வீரம் புலோலி சாரையடி வாழ் மக்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறது.அவர் வழியில் தமிழீழ விடுதலையின் அறிவாயுப்போர் முன்னேடுப்போம்.